கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியங்களில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு
கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியங்களில் புதிய பள்ளி கட்டிடத்தை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.;
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் புதியதாக கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் 65 பள்ளிகளுக்கு ரூ.18 கோடியே 2 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன. சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி மூலம் முதல்வா் ஸ்டாலின் பள்ளிக் கட்டிடங்களைத் திறந்துவைத்தாா்.
அதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலையை அடுத்த மாதலாம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்ட வகுப்பறைகளை தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி திறந்துவைத்தாா்.
தொடா்ந்து விழாவில் பிச்சாண்டி பேசியதாவது
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளில் மக்கள் பயன் பெறும் அளவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சிறப்பான முறையில் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வருகிறார். இதுவரை அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தினை எந்த முதலமைச்சரும் தொடங்கி வைத்ததில்லை. ஆனால் நமது முதலமைச்சர் பள்ளி குழந்தைகள் மழை காலங்களில் இன்னல்கள் அடையக் கூடாது என்ற உன்னத நோக்கில் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்துள்ளார்.
மேலும் நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் 222 புதிய பள்ளிக் கட்டடப் பணிகள் ரூ.67 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. தற்போது, திறக்கப்பட்டுள்ள 65 பள்ளிகளின் வகுப்பறைகளைத் தவிர மீதமுள்ள கட்டடப் பணிகள் நிறைவு பெற்றவுடன் விரைவில் திறந்து வைக்கப்படும்.
விவசாயிகளின் நலன் கருதி இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழகத்தில்தான் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கியவா் முன்னாள் முதல்வா் கலைஞர் கருணாநிதி. 1989-ஆம் ஆண்டு பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று ஆணை பிறப்பித்து செயல்படுத்தியவா்.
தற்போது, தமிழக முதல்வா் ஸ்டாலின் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம், தமிழ்வழியில் கல்வி பயின்ற கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.
ஒன்று முதல் 5 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் காத்து வருகிறாா். இந்தியாவில் முதன்முதலில் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தியவா் ஸ்டாலின். இப்படி மக்கள் நலனை கருதி எண்ணற்ற சிறந்த திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் முருகேஷ், அண்ணாதுரை எம்.பி., கூடுதல் ஆட்சியா் ரிஷப், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவா் பாரதி ராமஜெயம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் தமயந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.