வேட்டவலம் அருகே ஓடும் ஆம்புலன்சில் 'குவா குவா': தாயும் சேயும் நலம்

வேட்டவலம் அருகே 108 ஆம்புலன்சில் அழகான பெண் குழந்தை பிறந்தது.;

Update: 2023-09-28 01:43 GMT

பைல் படம்

திருவண்ணாமலையில் ஒரே ஆம்புலன்சில் அடுத்தடுத்து 2 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்தது. இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது

திருவண்ணாமலை, வேட்டவலம் அருகே நல்லான்பிள்ளைபெற்றான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து நேற்று இரவு 108 ஆம்புலன்சுக்கு பிரசவ வலி தொடர்பான அவசர அழைப்பு வந்தது.

உடனடியாக ஆவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் இயங்கும் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் பிரபு மற்றும் டிரைவர் கார்த்திகேயன் ஆகியோர் அங்கு விரைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், சே.பேட்டை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவரின் மனைவி ஆண்டாள் என்ற நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலியால் துடித்தார். பின்னர் அவர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சு மூலம் அழைத்து செல்லப்பட்டார்.

அவலூர்பேட்டை பைபாஸ், வடஆண்டாப்பட்டு ரெயில்நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது ஆண்டாளுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே உடனடியாக மருத்துவ உதவியாளர் பிரபு ஆம்புலன்சை ஓரமாக நிறுத்த டிரைவர் கார்த்திகேயனுக்கு அறிவுறுத்தினார். பின்னர் மருத்துவ உதவியாளர் பிரபு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அதில் ஆண்டாளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும், சேயும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

மீண்டும் அதே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அவசர அழைப்பு வந்தது. இந்த 108 ஆம்புலன்ஸ் மீண்டும் அங்கு சென்று மாதப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கத்தின் மனைவி சரண்யா என்பவர் பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்தார்.

அவரை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்தனர். சோமாசிபாடி தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது, சரண்யாவிற்கு பிரசவ வலி அதிகரிக்கவே உடனடியாக மருத்துவ உதவியாளர் பிரபு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார்.

அதில் சரண்யாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும் சேயும் பத்திரமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

Tags:    

Similar News