கீழ்பென்னாத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வு நாள் கூட்டம்
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிக்கான குறை தீர்வு நாள் கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடந்தது.;
திருவண்ணாமலை வருவாய் கோட்டத்தில் தங்களுக்கு ஊரக வேலை விட்ட பணியை முறையாக வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வுநாள் கூட்டம் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி தலைமையில் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, வட்டாட்சியர் சாப்ஜான், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர்கள் பன்னீர்செல்வம், சக்கரை, பரிமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் செங்கம், தண்டராம்பட்டு, திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு குறைகள் குறித்து முறையிட்டனர். அப்போது ''100 நாள் வேலைப்பணி முறையாக வழங்கவில்லை. பட்டா, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் முறையாக வழங்கப்பட வேண்டும்.
தங்களுக்கு ஊரக வேலைத் திட்டப் பணி முறையாக வழங்குவதில்லை. எனவே, பணியை முறையாக வழங்க வேண்டும். பணி அட்டை வழங்குவதில் உள்ள குளறுபடியை சரிசெய்ய வேண்டும்.
அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை சேர்த்து35 கிலோ அரிசி வழங்க வேண்டும். அரசு அலுவலகங்களில் சாய்தள வசதி ஏற்படுத்த வேண்டும்'' என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அப்போது வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி பேசுகையில், ''ஒரு மாத காலத்திற்குள் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.எனக் கூறினார்.
இதில் மண்டல துணை வட்டாட்சியர்கள் வேணுகோபால், சந்திரன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் மாலதி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா்கள் பன்னீா்செல்வம், சக்கரை, பரிமளா, பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் இளையராஜா உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.