கீழ்பெண்ணாத்தூர் தாலுகாவில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கீழ்பெண்ணாத்தூரில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலுகாவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அரங்கில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி தலைமையில் நடைபெற்றது.
வட்டார வேளாண் உதவி இயக்குனர் அன்பழகன், தாசில்தார் சரளா, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சுகுணா, தோட்டக்கலை உதவி இயக்குனர் அமுல் சேவியர் ,ஒன்றிய ஆணையர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், பேரூராட்சி செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் ஏழுமலை, குணசேகரன் உட்பட பலரும் குறை தீர்வு கூட்டத்தில் பேசினர்.
மேலும் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உரம் யூரியா இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . கரும்பு அறுவடைக்கு வெட்டுக்கூலி குறைக்கவும், விவசாயிகளுக்கு விதை மணிலா கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
சோமாசி பாடி சித்தேரியில் இருந்து ஆரஞ்சி ஏரிக்கு தண்ணீர் செல்ல ஏதுவாக சிமெண்ட் கால்வாய் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோமாசி பாடியில் உள்ள பொதுப்பணித்துறை ஏரி, மதக்கை உயர்ந்த நடவடிக்கை எடுக்கவும், ஏரி மற்றும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். தரைமட்ட கிணறுகளுக்கு இரும்பு வலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராம சாலைகளில் முள் செடிகளை அகற்றவும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்ய வேண்டும் . கிராமப்புறங்களில் சுகாதார நடவடிக்கை எடுக்க வேண்டும், கடைகளில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேட்டவலம் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள பெரிய ஏரியில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் மின்சார வயர்கள் தாழ்வான நிலையில் உள்ளதை உயர்த்தி சரி செய்ய வேண்டும்.
பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்துகளில் நீர் வரத்து கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்ன ஓலைப்பாடியில் வயல் வழியாக செல்லும் பாதையை தார் சாலையாக மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதில் அளித்தனர் முடிவில் வேளாண் துணை அலுவலர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
விவசாயிகள் வெளிநடப்பு
விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, திடீரென கட்சி சார்பற்ற விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாதம் தோறும் நடக்கும் ஒவ்வொரு விவசாயக் குறைவு கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனக் கூறிக்கொண்டு வெளிநடப்பு செய்தனர்.