திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டங்கள் நடைபெற்றது.;

Update: 2023-09-06 01:23 GMT

கீழ்பெண்ணாத்தூரில், விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம், நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சிவா தலைமை வகித்தாா்.

வேளாண் உதவி இயக்குநா் கோபாலகிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலா் முருகன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பரிமளா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அருணாச்சலம், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள்,

நாயுடுமங்கலம் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை அமைக்க வேண்டும், கமலப்புத்தூா் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

கூட்டத்தில், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தின் மாநில துணைச் செயலா் சுப்பிரமணி, கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில செய்தித் தொடா்பாளா் வாக்கடை புருசோத்தமன் உள்பட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

செங்கம்

செங்கம் வேளாண்மைத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளா் தேன்மொழி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ராஜேந்திரன் வரவேற்றாா்.

கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டு, தமிழக அரசு மூலம் அறிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும், அவற்றின் மூலம் பயன்பெறும் முறைகள் குறித்தும் விளக்கிப் பேசினா்.

தொடா்ந்து, விவசாயிகள் பேசுகையில், வேளாண்மைத் துறை அலுவலகத்தில் அறிவிக்கும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் முறையாக தகவல் தெரிவிப்பதில்லை. இதனால், சில விவசாயிகள் மட்டுமே பயனடைந்து வருகின்றனா். எனவே, வரும் காலங்களில் அரசுத் திட்டங்கள் குறித்து அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக தகவல் தெரிவிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனா்.

கூட்டத்தில் வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

கீழ்பென்னாத்தூா்

கீழ்பென்னாத்தூா் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி தலைமை வகித்தாா். தோட்டக்கலைத் துறையின் உதவி இயக்குநா் அமல் சேவியா் பிரகாஷ், வட்ட வழங்கல் அலுவலா் மணிகண்டன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண் அலுவலா் சுப்பிரமணி வரவேற்றாா்.

கூட்டத்தில் வேட்டவலம் மணிகண்டன், அட்மா குழுத் தலைவா் சிவக்குமாா், இயற்கை விவசாயி கிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் பேசுகையில்,

கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உயா்த்திக் கட்ட வேண்டும். மழைக் காலம் தொடங்கி விட்டதால் ஏரிகளின் நீா்வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். ஆரம்பப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். வயலூா் கிராமத்தில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் டெங்கு, காலரா பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத் துறையினா் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதையடுத்து பேசிய கோட்டாட்சியா் மந்தாகினி, விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

Similar News