வேட்டவலம் பகுதியில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
வேட்டவலத்தில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி அடிக்கல் நாட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் வேட்டவலம் ஒன்றியத்தில் உள்ள அண்டம் பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய நான்கு வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும் மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழாவும் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியர் பிரசன்னா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பத்மா முன்னிலை வகித்தார். ஆசிரியர் பார்த்திபன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு பள்ளியில் பதினோராம் வகுப்பு பயிலும் 79 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கியும், பள்ளியில் ரூபாய் 86 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நான்கு வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியும் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கியும் பேசினார்.
விழாவில் ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, வலசை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மாரிமுத்து, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ,ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
துணை சபாநாயகர் ஆய்வு
கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியம் சோமாசிபாடியில் விவசாயி மணிகண்டன் என்பவரது நிலத்தில் விளைந்த மணிலா இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணிகள் நடப்பதை துணை சபாநாயகர் பிச்சாண்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த மணிலா அறுவடை செய்யும் இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் 1.5 ஏக்கர் அறுவடை செய்ய முடியும் என்றும் இதற்கு வேளாண்மை பொறியியல் துறைக்கு ரூபாய் 500 வாடகை எனப்படும் இணையதளம் வழியாக பதிவு செய்து பணம் செலுத்த வேண்டும் என்றும் இயந்திரத்தின் முழு விலை ரூபாய் 2 லட்சம் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கீழ்பெண்ணாத்தூரில் 2.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை துணை சபாநாயகர் பிச்சாண்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். புதிய கட்டிடத்தில் அமைந்துள்ள பல்துறை அலுவலக அறைகள், கூட்ட அரங்கு, விருந்தினர் அறைகள் மற்றும் கிடங்கு ஆகியவற்றையும் பார்வையிட்ட அவர் அங்கு தோட்டம் அமைக்கவும் மரங்கள் நட்டு பராமரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், அட்மா குழு தலைவர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, திருவண்ணாமலை வேளாண் இணை இயக்குனர் அரக்குமார், துணை இணை இயக்குனர் ஏழுமலை, செயற்பொறியாளர்கள், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வேளாண் துணை அலுவலர்கள் ,விவசாயிகள், அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.