வேட்டவலம் அருகே வயல் தின விழா

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே வயல் தின விழா நடைபெற்றது.

Update: 2024-07-02 01:11 GMT

ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பது குறித்து விவசாயிகளுக்கு நடைபெற்ற பயிற்சி கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே வயல் தின விழா நடைபெற்றது

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் மற்றும் செம்மேடு ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை ஆகியவை இணைந்து நடத்திய கோ 11015 கரும்பு ரகத்தின் பரப்பளவை அதிகப்படுத்த ஆவூர் கரும்பு கோட்டத்திற்குட்பட்ட வேட்டவலம் அடுத்த ராஜன்தாங்கல் கிராமத்தில் வயல் தின விழா விவசாயி ஞானசேகரன் வயலில்  நடைபெற்றது.

கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனர் ஹேமப்பிரபா தலைமை தாங்கி கோ 11015 ரகத்தின் திறன் மற்றும் சிறப்பு இயல்புகள் மற்றும் கோ 14012, கோ 18009 ஆகிய புதிய ரகங்களின் மகசூல் திறன் ஆகியவை குறித்து பேசினார். ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை பொது மேலாளர் மூர்த்தி முன்னிலை வகித்து சர்க்கரை ஆலையின் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி புத்திர பிரதாப் வரவேற்றார். ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை கரும்புத்துறை பொது மேலாளர் விஜயகுமார் கோ 11015 புதிய ரக கரும்பு விரைவாக வளர்ந்து அதிகமாக மகசூல் தருவதாகவும், இந்த கரும்பு ஆலைக்குட்பட்ட பகுதியில் சுமார் 21 சதவிகித பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து சர்க்கரை ஆலையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து பேசினார். இதில் வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன், ஆவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஏழுமலை விஞ்ஞானிகள் கோபி, ராஜா, துளசிலிங்கம் மற்றும் ஆவூர் கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை ஆராய்ச்சி மைய தலைவர் ஜெயராம் நன்றி கூறினார்.

ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூா் வட்டாரம் ,  மோசவாடி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வட்டார தொழில்நுட்ப மேலாளா் செல்வ வெங்கடேஷ் வரவேற்புரை வழங்கினாா். வேளாண் உதவி இயக்குநா் கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா் நாராயணன் கலந்துகொண்டாா்.

தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரகாஷ் கலந்துகொண்டு தோட்டக்கலை பயிா்கள் குறித்து விளக்கினாா். மேலும், விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், விவசாயிகளுக்கு பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் உதவி வேளாண் அலுவலா் ராஜ்குமாா் மானிய திட்டங்கள் குறித்து விளக்கினாா். உதவி தொழில்நுட்ப மேலாளா் வினோத்குமாா் நன்றி கூறினாா்.   இந்நிகழ்வில் , மோசவாடி கிராமத்தைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News