டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் பெண் போராட்டம்: மதுப்பிரியர்கள் ஏமாற்றம்

திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் குடும்பத்துடன் பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Update: 2022-01-20 07:36 GMT

டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் குடும்பத்துடன் போராட்டம் நடத்திய பெண்.

திருவண்ணாமலை அருகே உள்ள தென்மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. அவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 3 குழந்தைகள்.

இவரது வீட்டுடன் கூடிய கட்டிடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்  காலை டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் மற்றும் விற்பனையாளர்கள் கடையை திறக்க வந்துள்ளனர்.

அப்போது கட்டிடத்தின் உரிமையாளரான செல்வி, அவரது கணவர் ஏழுமலை மற்றும் குழந்தைகளுடன் கடையை திறக்கவிடாமல் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வெறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவரது கணவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கடை ஏன் பூட்டி இருக்கிறது என்று தகராறு செய்ததாகவும், அவர்கள் மீது போலீசில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் கடையை திறக்கவிடுவோம் என்று தெரிவித்தனர். இதனால் நண்பகல்  வரை டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இதனால் மது பிரியர்கள் பலர் கடைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன்  கடை திறக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது, கட்டிட உரிமையாளருக்கு கள்ளச்சந்தையில் மதுபானம் விற்க மதுபானம் கொடுக்க சூப்பர்வைசர் மறுத்ததால் அவர்கள் டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். 

Tags:    

Similar News