திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டி கல்வெட்டுகள் கண்டெடுப்பு
திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் ஆங்கிலேயர் காலத்து ஆட்சியர் அறச்செயல் குறித்த 2 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினைச் சேர்ந்த பாலமுருகன், பழனிசாமி, தண்டராம்பட்டு ஸ்ரீதர் ஆகியோர்கள் களஆய்வு செய்யும் போது திருவ ண்ணா ம லை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் 3 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அதில், பல சுவையான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட வரலாறு ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் தெரிவிக்கையில்,
தச்சம்பட்டு முருகன் கோயில் அருகே உள்ள குளத்தின் கரையில் இரண்டு கல்வெட்டுகளில் ஒன்று ஒரு குறுநில தலைவனும் அவனது மனைவியும் உள்ள சிற்பம் அதன் கீழ் 3 வரிக்கல்வெட்டு, அருகில் உள்ள பலகையில் மற்றொரு கல்வெட்டு, மணலூர்பேட்டை சாலையின் ஓரம் ஒரு ஆங்கில கல்வெட்டு இருந்தது. இந்த கல்வெட்டுகளில் குறுநில தலைவன் என்று கருதப்படுகிற ஆண் பெண் உள்ள சிற்பம் கீழ் உள்ள கல்வெட்டில், மணலூர்ப்பே ட்டையிலிருக்கும் கெங்கை கோத்திறம் என்று உள்ளது. அருகில் உள்ள பலகைக் கல்வெட்டில் கிருஷ்ணப்ப நாயக்கர் அவர்கள் பெண்ஜாதி சூப்பச்சியம்மனுக்காக பச்சையம்மாள் மகனார் முனியகண்ணன் குளம்மும் தற்ம சத்திரமும் கட்டியதாக குறிப்பிடுகிறது. இந்த இரண்டு கல்வெட்டுகளும் சுமார் 350 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்.
சாலையின் அருகில் உள்ள ஆங்கில கல்வெட்டில், ஆங்கிலேயேர் கால கலெக்டரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் மற்றும் நாப்புதுரை விடுதி என்று பொறிக்கப்பட்டுள்ளது. நாப்புதுரை என்பவர் அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தின் ஆட்சியர் (1909-1910) என்பதும், இங்கிலாந்தில் உல்ஸ்டனில் 1870ல் பிறந்தவர் என்பதும் தெரிகிறது. இவர், மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு பணிகளை இந்தியாவில் செய்து, வருவாய்துறை செயலாளராகவும் இருந்துள்ளார். மெட்ராஸ் எம்.எல்.சியாக இருந்துள்ளார். கடந்த 1954ல் இறந்துள்ளார். இவர் காலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு வகுத்துள்ளார்.
அதனால், அவரை இங்கு போற்றும்விதமாக கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலக சுற்றுச்சுவரிலும், இதுபோன்ற கல்வெட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கல்வெட்டுகள் இரண்டு அறச்செயலை குறிப்பிடுவதால் இது முக்கியமான கல்வெட்டு வரலாற்றில் பதிவுசெய்யப்படுகிறது என தெரிவித்தார். களப்பணியின் போது கிராம நிர்வாக அலுவலர், பாலகிருஷ்ணன், கிராம உதவியாளர் ஆதிலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.