திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்சி விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்சி விளம்பரங்களை அழிக்கும் பணியில், வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
மக்களவைத் தேர்தலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணியில், வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி விளம்பரப் பதாகைகளை அகற்றுவது, பொது மற்றும் தனி நபா்களின் சுவா்களில் எழுதப்பட்டுள்ள கட்சி விளம்பரங்களை அழிப்பது போன்ற பணிகளில் அந்தந்த வட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
செங்கம்
செங்கம் துக்காப்பேட்டையில் இருந்த முன்னாள் முதல்வா்கள் அண்ணா, எம்ஜிஆா் சிலைகளை மூடி நகரில் இருந்த டிஜிட்டல் பதாகைகள், சுவா் விளம்பரங்களை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
வந்தவாசியில் அரசியல் கட்சி பதாகைகள் அகற்றம்
வந்தவாசி நகரில் அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன .
இதனைத் தொடர்ந்து வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி, காந்தி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகளை அகற்றும் பணி நடைபெற்றது, நகராட்சி ஊழியர்கள் இந்த விளம்பர பதாகைகளை அகற்றி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.
பூட்டி சீல் வைக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகங்கள்
தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று சனிக்கிழமை மாலை இந்திய தோதல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, உடனுக்குடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகங்களும் சனிக்கிழமை இரவே பூட்டி சீல் வைக்கப்பட்டன.
குறிப்பாக, திருவண்ணாமலை ரவுண்டானா பகுதியில் உள்ள திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், அமைச்சருமான எ.வ.வேலுவின் அலுவலகம், கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவருமான கு.பிச்சாண்டியின் அலுவலகம் ஆகியவை சனிக்கிழமை இரவே பூட்டி சீல் வைக்கப்பட்டன.
இவ்விரு அலுவலகங்களையும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து பூட்டி சீல் வைத்தனா். இதேபோல, மாவட்டத்தில் உள்ள மற்ற சட்டப்பேரவை உறுப்பினா்களின் அலுவலகங்களும் சனிக்கிழமை இரவே பூட்டி சீல் வைக்கப்பட்டன.