கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு
கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில், மழையினால் சேதமடைந்த பகுதிகளை, தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி ஆய்வு செய்தார்.;
திருவண்ணாமலை ஒன்றியம், கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், மழை பாதிப்புகளை சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆய்வு செய்தார். அண்டம்பள்ளம் கிராமத்தில் உள்ள ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர், நாரையூர் கிராமத்தில் கன மழையினால் வீடுகள் சேதம் அடைந்தவர்களுக்கு அரிசி மற்றும் சமையல் பொருட்களை வழங்கினார்.
வேட்டவலம் பேரூராட்சியில் கன மழையினால் சேதமடைந்த வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்க, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நுக்காம்பாடி கிராமத்தில் ஆய்வு செய்த போது, அங்கு இருந்த விவசாயிகள், பயிர்கள் சேதம் அடைந்ததைக்கூறி, நிவாரண தொகை வழங்க கேட்டுக்கொண்டனர்.
அப்போது அதிகாரிகளிடம், இவர்களுக்குரிய பயிர்ச்சேத மதிப்பை மதிப்பீடு செய்து, உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார்.ஆய்வின்போது வேளாண்மைத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உடனிருந்தனர்.