மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்
மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கண்டிப்பாக விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என பேரவை துணைத்தலைவர் கூறினார்;
துரிஞ்சாபுரம் ஒன்றியம் புது மல்லவாடி கிராமத்தில் தமிழக அரசின் மனு நீதி நாள் முகாம் ஆர்டிஓ வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி 138 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கண்டிப்பாக விரைவில் நிவாரணம் வழங்கப்படும். அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் வடகிழக்கு பருவமழை பாதிப்பிலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட்டனர். ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்துள்ளீர்கள், கண்டிப்பாக துறை ரீதியாக பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் பாரதி ராம ஜெயம், கிராம நிர்வாக அலுவலர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.