11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காலமுறை ஊதியம் வழங்க கோரி கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.;
காலமுறை ஊதியம் வழங்கக்கோரி கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஒன்றிய அளவிலான கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார். செயலாளர் முனுசாமி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க வட்ட கிளை தலைவர் சங்கர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் அண்ணாதுரை, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வுபெற்ற ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சம்பத் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில் ஏராளமான சத்தணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களுக்கு சிறப்பு கால ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ9ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வு பெறுபவர்களுக்கு ஒட்டுமொத்த தொகை பணிக்கொடையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், தேவைக்கு ஏற்ப எரிவாயு சிலிண்டர்களை அரசே வழங்க வேண்டும், சமையல் உதவியாளர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். அரசு பெண் ஊழியர்களுக்கு 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்குவதைப்போல் சத்துணவு திட்ட பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், வேலைநிறுத்த காலத்திற்கான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் ஒன்றிய இணைசெயலாளர் சகலகலாவாணி நன்றி கூறினார்.