22 குடும்பங்களுக்கு வீடு கட்டும் பணி; துவக்கி வைத்த துணை சபாநாயகர்
துரிஞ்சாபுரம் அருகே, 22 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர், பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.;
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் யூனியனுக்கு உட்பட்ட அகரம் சிப்பந்தி ஊராட்சியில் ரூபாய் 96 லட்சத்தில் 22 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பூமி பூஜை செய்து பணிகளை துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட துணை சேர்மன் பாரதி ராமஜெயம், யூனியன் சேர்மன் தமயந்தி ஏழுமலை, ஆகியோர் முன்னிலை வகித்தனர் . பொறியாளர் அருணா அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 22 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பேசியதாவது.
நார்த்தாம்பூண்டி பகுதியில், நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்த 42 வீடுகள் ஆக்கிரமிப்பில் அகற்றப்பட்டதால், கருணை அடிப்படையில் 22 பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு மூலம் வீடு கட்டுவதற்கு அரசாணையை வழங்கி உள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு விரைவில் வழங்கப்படும். மேலும் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதிக்கு ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் மேல்நீர் தேக்க தொட்டி அமைத்து கொடுக்கப்படும்.மேலும், 19 லட்சத்தில் புதிய சாலை அமைப்பதற்கு உண்டான பணிகளையும் விரைவில் செய்து கொடுக்கப்படும்.
இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படும். மீதமுள்ள குடும்பங்களுக்கும் விரைவில் வீடுகள் அமைத்து தரப்படும் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பயணிகளுக்கு உறுதியளித்து வீடு கட்டும் பணியை விரைந்து முடித்து பயனாளிகளிடம் ஒப்படையுங்கள் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,அரசு அலுவலர்கள், ஒன்றிய செயலாளர்கள், பயனாளிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் வேட்டவலம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை துணை சபாநாயகர் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வேட்டவலம் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் 396 பேருக்கு இலவச சைக்கிள்களை சபாநாயகர் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.
பின்னர் குறு வட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்ற வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 22 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.