கருங்காலிகுப்பம் விதை பண்ணையில் கோவை விதை சான்று இயக்குனர் ஆய்வு
கருங்காலிகுப்பம் விதைப்பண்ணையில் கோவை விதை சான்று இயக்குனர் ஆய்வு செய்தார்.;
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் சான்று பெற்ற விதைகள் மற்றும் விதை விற்பனை நிலையங்களுக்கான விற்பனை உரிமம் போன்றவற்றுக்கான தலைமையிடம் கோவையில் உள்ளது.
கோவை விதை சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குனரான சுப்பையா திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா கருங்காலிகுப்பம் கிராமத்துக்கு வந்து, அங்குள்ள விவசாயி எம்.ராமகிருஷ்ணன் என்பவரின் வயலில் அமைக்கப்பட்டுள்ள நெல் ஏ.டி.டி.37 ரகம் விதைப்பண்ணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது சுப்பையா, விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அவர் கூறுகையில், விதைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் விதைகள், பிற ரக கலப்பு இல்லாமலும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். விதைச்சான்று துறை மூலம் உற்பத்தி செய்யப்படும் விதைகள் தரமான சான்று பெற்ற விதைகளாகும். இதனால், நல்ல மகசூல் கிடைக்கும், என்றார். ஆய்வின்போது திருவண்ணாமலை மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் மலர்விழி, விதைச்சான்று அலுவலர்கள் பிரபு, நடராஜன், ராமகிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, கீழ்பென்னாத்தூர் வட்டார உதவி விதை அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் உடனிருந்தனர்.