திருவண்ணாமலை அருகே கோவில் வழிபாடு தொடர்பாக இருபிரிவினர் இடையே மோதல்

திருவண்ணாமலை அருகே கோவில் வழிபாடு தொடர்பாக இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2023-06-18 10:22 GMT

பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர்.

பட்டியலின மக்கள் கோவிலுக்கு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்வது தொடர்பாக இரு வேறு வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் முகநூலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கிராமத்தில் கைகலப்பாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 250-க்கும் மேற்பட்ட பொது பிரிவினரும், 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களும் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு பொதுப்பிரிவினர் மட்டும் வழிபாடு செய்வார்கள். அதேபோல் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அவர்களுக்கென தனியாக காளியம்மன் கோவிலும் உள்ளது.

இந்நிலையில் மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என சிலர் இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இதற்கு பொது பிரிவினர் சமூக வலைத்தளம் மூலமாகவே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இளைஞர்கள் மாறி, மாறி தங்கள் கருத்துகளை பதிவிட்டதால், இருத்தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று இருத்தரப்பினரும் நேரில் சந்தித்தனர். அப்போது இளைஞர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையறிந்த வேட்டவலம் போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லங்குப்பம் கிராமத்திற்கு வந்தனர். அப்போது வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர்.

தற்பொழுது செல்லங்குப்பம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இரு தரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பட்டியல் இனத்தைச் சார்ந்த தங்கராசு மீது அடிதடி, தகராறு என வழக்கு பதிவு செய்தும், பிற சாதியைச் சார்ந்த செந்தமிழ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கிராமத்தில் நேற்று முதல் பதட்டமான சூழல் நிலவியது. இன்று தகவல் அறிந்த சப்-கலெக்டர் மந்தாயினி மற்றும் போலீசார் செல்லங்குப்பம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் அங்கு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் கிராமம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இன்னும் ஓரிரு நாட்களில் இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோவிலில் வழிபாட தொடர்பாக ஏற்பட்ட மோதலில்   போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

Tags:    

Similar News