பள்ளி மாணவர்களிடையே தகராறு அரசு பேருந்து சிறை பிடிப்பு

திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனை போராட்டமாக மாறியது.;

Update: 2023-08-23 02:58 GMT

அரசு பேருந்தை சிறை பிடித்து, சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனை போராட்டமாக மாறியது

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கீக்களூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை 130 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று மாலை 8ம் வகுப்பு ஸ்மார்ட் கிளாஸ் நடந்தது.

அப்போது செவரப்பூண்டி கிராமத்தை சேர்ந்த மாணவர் ஒருவரை கீக்களூர் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் கிள்ளியதாக சொல்லப்படுகிறது. கிள்ளுபட்ட செவரப்பூண்டியை சேர்ந்த மாணவர் ஆசிரியரிடம் கூறியுள்ளார். வகுப்பு ஆசிரியர் கிள்ளிய மாணவனை கண்டித்தாராம். இதன் பின்னர் நேற்று மாலை பள்ளி முடிந்த பிறகு சில மாணவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பிய மாணவர்கள் இது பற்றி பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் , கிராம மக்கள் , மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர் . அப்போது அந்த வழியாக  திருவண்ணாமலையில் இருந்து அவலூர்பேட்டை நோக்கி சென்ற அரசு பேருந்தை சிறை பிடித்தனர்.

மாணவர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்களது போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்து அரசு பேருந்தை விடுவிக்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை டிஎஸ்பி குணசேகரன் மற்றும் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் சொன்னதை ஏற்று இரவு 9 மணி அளவில் கிராம மக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர் . அதன் பிறகு பேருந்து புறப்பட்டு சென்றது.

மேலும் பிரச்சனை ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News