விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
விவசாயிகள் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.;
விவசாயிகள் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவண்ணாமலை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி தலைமை தாங்கினார். திருவண்ணாமலை வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன், தாசில்தார் சரளா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசுகையில்,
வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் தரமற்றதாக உள்ளன. அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக தரமான விதைகள் கிடைக்க நடவடிக்கை வேண்டும்.
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரத்தை சீராக வழங்க வேண்டும். நாயுடுமங்கலத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றது.
மேலும் நாயுடுமங்கலத்தில் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக பல்வேறு தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் அவ்வபோது விபத்துகள் ஏற்படுகின்றது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வர வேண்டி உள்ளது. குறைத்தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. பெயரளவிலேயே குறைதீர்வு கூட்டங்கள் நடைபெறுகின்றன.
விவசாயிகளின் கூட்டங்களுக்கு அதிகாரிகள் வராமல் அவர்களுக்கு கீழ் உள்ள கடைநிலை ஊழியர்களை அனுப்பி வைத்து விடுகின்றனர் என்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்து கொண்ட அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு தாலுகா மாதாந்திர விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தும் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை, இதை கண்டித்து அலுவலக வளாக முன்பு விவசாயிகள் திடீரென கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த வேளாண்மை துறை இணை இயக்குனர் நாராயண மூர்த்தி விவசாயிகளிடம் சமாதானம் செய்து அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் குறை கூட்டம் துவங்கியது.
இதில் விவசாயிகள் ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைகள் மனுக்களாகவும் நேரிலும் தெரிவித்தாலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது ஒரு சம்பிரதாய கூட்டமாக நடைபெறுகிறது.
தாசில்தார் ஒருமையில் போயா வாயா என்று பேசுகின்றனர், இதனை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.
இதனால் கூட்டத்தில் இருந்து தாசில்தார் உடனடியாக வெளியேறினார். பிறகு அவரை அதிகாரிகள் சமாதானப்படுத்தியதால் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதனால் அந்த சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பெண்ணாத்தூர் வட்ட அளவிலான விவசாயி துறை தீர்வு நாள் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்தில் விவசாயிகள் அதிகாரியிடம் அடுக்கடுக்கான குறைகளை முன் வைத்தனர்.
கரிக்கலாம்பாடி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கீழ்பெண்ணாத்தூர் உழவர் சந்தை கட்டிடத்தை மாற்று ஏற்பாடு செய்து வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களில் ஏற்படும் உரத்தட்டுப்பாட்டினை கட்டுப்படுத்த வேண்டும் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனு மீது உரிய நடவடிக்கை வருவாய் துறை மற்றும் வேளாண்மை துறையினர் எடுக்க வேண்டும்
வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வேளாண்மை துறை அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் வருகையை பதிவு செய்ய வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும்
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மண் பரிசோதனை திட்ட நடமாடும் வாகனத்தினை தாலுகா அளவில் உள்ள கிராமங்கள் தோறும் பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும்.
விவசாயிகள் நிலம் அளக்க பணம் கட்டியும் சர்வேயர்கள் காலம் தாழ்த்துவதாக புகார் எழுந்துள்ளது, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் கிராம நிர்வாக அலுவலர்களை பணி மாற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.