மனுநீதி நாள் முகாமிற்காக பொது மக்களிடம் இருந்து மனு பெறும் நிகழ்ச்சி
வேட்டவலம் அருகே மனுநீதி நாள் முகாமுக்காக கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி துணை கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.;
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே ஆவூர் கிராமத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்)மனுநீதி நாள் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற உள்ளது. அதற்காக ஆவூர் கிராம நிர்வாக அலுவலகம் எதிரே ஆவூர், நெய்வாநத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் தாசில்தார் சர்க்கரை, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பன்னீர்செல்வம், மண்டல துணை தாசில்தார் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேட்டவலம் வருவாய் ஆய்வாளர் அல்லி வரவேற்றார். தனித்துணை ஆட்சியர் வெங்கடேசன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா உட்பிரிவு, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை மற்றும் வருவாய்த் துறைக்கு சம்பந்தமான மொத்தம் 454 மனுக்கள் பெறப்பட்டது.
இதில் தலைமை நில அளவர் சாகுல்ஹமீது, குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜப்பார், ஒன்றியக்குழு உறுப்பினர் சூர்யா, துணைத்தலைவர் பல்கீஸ் ஜான் பாஷா, ஊராட்சி செயலாளர் சிந்துஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம அலுவலர் உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.