கீழ்பென்னாத்தூா் அருகே பைக் மீது லாரி மோதி விவசாயி உயிரிழப்பு

கீழ்பென்னாத்தூா் அருகே பைக் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2024-02-03 02:13 GMT

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம் மகன் சிவக்குமாா் , விவசாயி.

இவா், வியாழக்கிழமை இரவு பொக்லைன் வாகனத்துக்குத் தேவையான உதிரி பாகங்களை வாங்குவதற்காக திருவண்ணாமலைக்குச் சென்றாா். மீண்டும் பைக்கில் செல்லங்குப்பம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, திருவண்ணாமலை-விழுப்புரம் சாலை, ஐந்து வீடு என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்தபோது, திருவண்ணாமலை நோக்கி வந்த சரக்கு லாரி ஒன்று இவரது பைக் மீது மோதியது. இதில் சிவக்குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்பெண்ணாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இருந்த சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த சிவகுமாருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் ஒரு மகனும் உள்ளனர்.

சாலை மறியல்

இந்நிலையில் நேற்று விபத்து நடந்த இடத்தில் அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு அந்த பகுதியில் வரும் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்படுகிறது .இங்கு தனியார் பள்ளிகள் உள்ளது. எனவே அங்கு வேகக் கட்டுப்பாட்டு தடுப்புகள் அமைக்க வேண்டும் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டிஎஸ்பி குணசேகரன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் சாலை மறியல் கைவிடப்பட்டது.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமாா் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News