மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் போக்சோவில் கைது
வேட்டவலம் அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.;
திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவரது தாய், மகாராஷ்டிராவில் வீட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
வேட்டவலம் பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வரும் மார்பின் சீரி (வயது25) என்பவர் பாட்டி வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, வீட்டின் மாடிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவருடன் ஹோட்டலில் வேலை செய்யும் விழுப்புரம் மாவட்டம் நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த அவரது நண்பர், 17 வயது சிறுவனையும் உடன் அழைத்து சென்றுள்ளார். வாலிபரும் சிறுவனும் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
தகவலறிந்த அக்கம் பக்கத்தினர், திருவண்ணாமலையில் உள்ள சைல்டு லைனிற்கு ரகசிய தகவல் கொடுத்தனர். அவர்கள் மாணவியை மீட்டு திருவண்ணாமலை குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக குழந்தைகள் காப்பக நல அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவன், மார்பின்சிரில் ஆகியோரை கைது செய்தனர்.