பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்
சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் அன்பாலயா கிராம மேம்பாட்டு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா மங்கலம் கிராமத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் அன்பாலயா கிராம மேம்பாட்டு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அன்பாலயா கிராம மேம்பாட்டு அறக்கட்டளையின் இயக்குனர் மதுபாரதி தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.
திருவண்ணாமலை முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் தலைவர் சட்டப்பணிகள் ஆணைக்குழு சி. திருமகள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகையில் பெண்களுக்கான குழந்தை திருமணம் தடுத்தல் குறித்தும் குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல் பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவில் இருந்து மீட்பது குறித்தும் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் குறித்தும் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஸ்ரீராம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராஜமோகன், நீதித்துறை நடுவர் விக்னேஷ் பிரபு, திருவண்ணாமலை போக்சோ நீதிபதி வசந்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி இருசன் பூங்குழலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.