செங்கத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

செங்கத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.;

Update: 2023-12-27 02:13 GMT

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்எல்ஏ கிரி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செங்கம் பேரூராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளா் வெற்றிவேல் தலைமை வகித்தாா். பேரூராட்சி தலைவா் சாதிக்பாஷா, அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், திமுக ஒன்றியச் செயலா்கள் ஏழுமலை, செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.பேரூராட்சி செயலா் ஆனந்தன் வரவேற்றாா்.

திட்டம் குறித்து வட்டாட்சியா் முருகன் பேசினாா்.

சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு முகாமை தொடங்கிவைத்து நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். அப்போது அவா் பேசுகையில்,

தமிழக அரசின் 13 துறைகளை சார்ந்த அலுவலர்கள் செங்கம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் மனு கொண்டு வரும்போது மக்களிடம் கனிவான முறையில் வரவேற்று பேசி அவர்கள் கொடுக்கும் மனுக்களை பெற்றுக்கொண்டு அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதல்வர் கொண்டு வந்த இந்த மகத்தான மக்களோடும் முதல்வர் திட்டம் வெற்றி பெற வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

முதல்வா் திட்ட நிகழ்ச்சியில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்று, காலை முதல் மதியம் வரை என மூன்று நாள்களும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று தகுதிவாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து மாலையில் நலத் திட்ட உதவிகளை வழங்குவாா்கள்.

மேலும், முகாமில் வழங்கும் சில மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு நலத் திட்ட உதவிகள் வழங்குவாா்கள் என்றாா்.

நிகழ்ச்சியில் அனைத்துத் துறை அதிகாரிகள் ,  உள்ளாட்சிப் பிரதிநிதிகள், செங்கம் பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Similar News