நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்க மாட்டோம்; உதயநிதி ஆவேசம்

பிரதமர் நரேந்திர மோடியை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்க மாட்டோம் என உதயநிதி பேசினார்.;

Update: 2024-03-27 02:35 GMT

திருவண்ணாமலை வேட்பாளர் அண்ணாதுரைக்கு வாக்கு சேகரித்த உதயநிதி.

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது;

திருவண்ணாமலை பாராளுமன்ற வேட்பாளரும் இந்தியா கூட்டணியின் சார்பாக போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் திருவண்ணாமலை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் , கலைஞரின் ஆசி பெற்றவர், முதல்வரின் அன்பைப் பெற்றவர், உங்களின் ஆதரவை பெற்ற வேட்பாளர் அண்ணாதுரை அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.

வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடக்கும் தேர்தலில் வெற்றி சின்னம் உதயசூரியன் சின்னத்தில் அண்ணாதுரையை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கப் போவது உறுதி. தாய்மார்கள் முடிவை யாரும் நினைத்தாலும் மாற்ற முடியாது. கடந்த தேர்தலில் அண்ணாதுரை  3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை நான்கு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்,

திருவண்ணாமலை தொகுதியில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை-சென்னை இடையே தினசரி ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3 லட்சம் மாணவிகள் பலனடைந்துள்ளனர். மோடி ஆட்சியில் கேஸ் சிலிண்டர் விலை கணிசமாக உயர்ந்துவிட்டது. கட்டணமில்லா பயணத்தால் பேருந்தில் 460 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். காலை உணவுத் திட்டத்தால் 18 லட்சம் குழந்தைகள் பலனடைந்து வருகின்றனர்.

சிலிண்டர் விலையை பிரதமர் மோடி ரூ.100 குறைத்து இருப்பது தேர்தல் நாடகம். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலையை மேலும் ரூ.500 உயர்த்தி விடுவார்கள். திருவண்ணாமலைக்காக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற திட்டங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும். பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்கப் போவதில்லை என்பதால் திமுகவிற்கு தூக்கம் போய்விட்டது. பாஜக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் வரை பணி தொடர வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவதால் நாங்கள் தூங்கவில்லை என்று கூறுகிறார்கள் உண்மைதான், நரேந்திர மோடியை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்க மாட்டோம்.

மாணவர்கள் தாய்மார்கள் குழந்தைகள் என அனைவருக்கும் பல உன்னத திட்டங்களை தீட்டி நமது முதல்வர் செயல்படுத்தி வருகின்றார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக ஒரு செங்கலை வைத்துவிட்டு போனார்கள் அந்த செங்கலை உங்களிடம் இதோ நான் காட்டுகிறேன், என்று செங்கலை காட்டினார்.

பொருளாதார உரிமைகளை மீட்டெடுக்க வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வெற்றி சின்னமான உதயசூரியனுக்கு வேட்பாளர் அண்ணாதுரைக்கு வாக்களித்து பெரும் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் என உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமார், மதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், விசிக மாவட்ட செயலாளர் நியூட்டன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், அணி அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உதயநிதிக்கு கூழ் வழங்கிய சகோதரி

அதனைத் தொடர்ந்து செங்கம் தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற போது முறையார் பகுதியில் அங்கே கூழ் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவர், உதயநிதி வாகனத்தை இடைமறித்து நலம் விசாரித்து வெயில் அதிகமாக இருக்கிறது என்று கூறி பருகுவதற்கு கூழை கொடுத்தனர்.


                                                              பிரச்சாரத்தின் போது கூழ் பருகிய உதயநிதி

அதனை வாங்கி பருகிய உதயநிதி, அங்கு இருந்தவர்களிடம் உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்து தனது பயணத்தை தொடர்ந்தார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News