தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தண்ணீரில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணையில் உள்ள இடது மற்றும் வலதுபுற கால்வாய் மூலமும், திருக்கோவிலூர் ஆயக்கட்டு பகுதிக்கு தென்பெண்ணை ஆற்றின் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
இதனால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் மற்றும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதேபோல் 105 ஏரிகளும் நீர் ஆதாரங்களை பெற்று வருகின்றன.
இந்த ஆண்டு அணையில் முழு கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் அணையில் தற்போது உள்ள நீரைக் கொண்டு ஏரிகளுக்கு, நீராதாரம் பெறும் வகையில் கடந்த 6-ந் தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சாத்தனூர் அணை தண்ணீரை திறந்து விட்டார். தொடந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்தநிலையில் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதிக்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடவும் திட்டமிடப்பட்டு அன்றே தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களுக்கு ஒரு முறை 5 நாட்களுக்கு ஒரு முறை என விட்டுவிட்டு இந்த தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இதனால் தற்போது தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்று பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் திருவடத்தனூர், ராயண்டபுரம், தொண்டமானூர், சதாகுப்பம், வாழவச்சனூர் ஆகிய பகுதிகளில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது