தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் கையாடல் தொடர்பாக மூவர் சஸ்பெண்ட்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 9 லட்சம் கையாடல் தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த சொப்பனத்தல் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.இந்த கடன் சங்கத்தில் விவசாயிகளின் சேமிப்பு கணக்குகளில் இருந்து பல லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளதாக மாவட்ட பதிவாளருக்கு புகார்கள் சென்றன.
இதனையடுத்து கூட்டுறவு கடன் சங்கங்களின் மாவட்ட இணை பதிவாளர் நடராஜன், துணைப் பதிவாளர் வசந்த லட்சுமி ஆகியோரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் சீனிவாசன் உர விற்பனையாளர் வெங்கடேசன் மற்றும் விற்பனையாளர் விஜயன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் விவசாயிகளின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ. 9 லட்சம் கையாடல் செய்துள்ளது தெரியவந்தது. மாவட்ட இணை பதிவாளர் துணைப்பதிவாளர் பரிந்துரையின் பேரில் சீனிவாசன், வெங்கடேசன் ,விஜயன் ஆகிய மூன்று பேரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்கத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.