சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஸ்டாலின் நிவாரண உதவி
சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.;
சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்..
செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் ஊராட்சி அருகே திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு நோக்கி கர்நாடக பதிவு எண் கொண்ட கார் சென்று கொண்டிருந்தது. அதே சாலையில், சிங்காரப்பேட்டையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி லாரி ஒன்று வந்த கொண்டிருந்துள்ளது.
இந்த நிலையில், திடீரென எதிர்பாராத விதமாக லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் கார் முற்றிலுமாக நொறுங்கியது. மேலும், இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள், நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு பெண் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் காருக்குள் உயிரிழந்த நிலையில் சிக்கி இருந்தவர்களையும், பலத்த காயங்களுடன் இருந்த பெண்னையும் பொதுமக்களின் உதவியோடு மீட்டனர். தொடர்ந்து பலத்த காயமடந்த பெண்னை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் செங்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையே விபத்து நேரிட்டதும் லாரி ஓட்டுநர் தப்பிச் சென்றதாகவும், இதனால் விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், தொடர்ந்து விபத்து எப்படி நேரிட்டது என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த விபத்து குறித்து செங்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர் கிரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
முதல்வர் இரங்கல்
இந்த நிலையில், திருவண்ணாமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவித்துள்ளார். திருவண்ணாமலை அருகே இன்று காலை காரும், லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்விபத்தில் படுகாயமடைந்து திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி இரங்கல்
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், பக்கிரிபாளையம் பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்றவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சையளிக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.