தானிப்பாடி அருகே வீட்டுமனை தகராறில் துப்பாக்கிச்சூடு: தொழிலாளி கவலைக்கிடம்
தானிப்பாடி அருகே வீட்டுமனை தகராறு காரணமாக துப்பாக்கியால் சுட்டதில் தொழிலாளி கவலைக்கிடமாக உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த தானிப்பாடி அருகே உள்ள கல்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள கீழ்வலசை மலைக்கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆதிமூலம் (வயது 49), ஆண்டி (40) கூலித்தொழிலாளிகள்.
இருவருக்கும் இடையே காலி மனையில் வீடு கட்டுவது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆதிமூலத்தின் மனைவி பொன்னம்மாளும் (40) சேர்ந்து ஆண்டியோடு தகராறு செய்துள்ளார்.
இந்த தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த ஆதிமூலம் நாட்டு துப்பாக்கியால் ஆண்டியின் மார்பில் சுட்டதாக கூறப்படுகிறது. அதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் தூளி கட்டி மலையில் இருந்து இறக்கி தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், ஆண்டியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவரை உயர்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறி்து ஆண்டி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதிமூலம், பொன்னம்மாள் ஆகியோரை கைது செய்தனர். மேலும் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட கணவன்-மனைவி இருவரையும் தண்டராம்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.