சாத்தனூர் அணையில் 99 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கம்: நீர்ப்பாசன அதிகாரிகள்
இம்மாத இறுதியில் ஏரிகளுக்கு மட்டும் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டடுள்ளதாக நீர்ப்பாசன அதிகாரிகள் தெரிவித்தனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணை உள்ளது. 119 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் உள்ள 20 ஷட்டர்கள் அகற்றப்பட்டு, ரூ.55 கோடி மதிப்பில் புதிய ஷட்டர்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. ஷட்டர்கள் அனைத்தும் 20 அடி உயரம் கொண்டவை. இதனால், அணையில் 99 அடி வரை மட்டும் தண்ணீரைச் சேமிக்க முடியும் என்ற நிலை உருவானது. இது தொடர்பாக, தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நீர் பாசனத்தை நம்பி திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அத்தோடு திருக்கோவிலூர் பகுதியில் 5000 ஏக்கருக்கும் 3 மாவட்டங்களில் உள்ள 84 ஏரிகளும் சாத்தனூர் அணையை நம்பியே உள்ளன.
இந்நிலையில் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் தற்போது 99 அடியாகவும் கொள்ளளவு 3.546 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. எனவே நேரடி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பு இந்த ஆண்டும் இல்லை. இதுகுறித்து சாத்தனூர் அணை நீர்வள ஆதார பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறும்போது சாத்தனூர் அணையின் மதகுகள் சீரமைப்பு பணி நடப்பதால் அணை முழுமையாக நிரம்ப வில்லை.
இந்த ஆண்டு இறுதி வரை சீரமைப்பு பணிகள் நடைபெறும். எனவே இந்த ஆண்டும் ஆனால் முழுமையாக நிரம்புவதற்கு வாய்ப்பு இல்லை. கோடை காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால், ஏரிகளிலும், கிணறுகளிலும் தண்ணீர் குறைய தொடங்கி இருக்கிறது . எனவே இந்த மாத இறுதியில் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதையொட்டி விவசாயிகளை அழைத்து கருத்து கேட்பு கூட்டம் விரைவில் நடத்தப்படும். தொடர்ந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என்றனர்.