ஆயிரம் ரூபாய்க்கு ‘ஆசைப்பட்ட’ வருவாய் ஆய்வாளர் கைது

வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-07-03 01:29 GMT

கைது செய்யப்பட்ட வருவாய் ஆய்வாளர் பாரதி.

செங்கம் அருகே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு நிறைய தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  எனினும் சில அதிகாரிகள் கையும் களவுமாக சிக்கி பொதுவெளியிலேயே அசிங்கப்பட்டு விடுகிறார்கள்.

லஞ்சம் வாங்குபவர்கள், பட்டா மோசடி செய்பவர்கள் என எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்களின் தவறு நிரூபணமாகும்பட்சத்தில் உடனுக்குடன் கைது செய்யப்படுகிறார்கள்.. இதில் விஏஓ முதல் தாசில்தார் வரை கைதாவது அதிர்ச்சியை தந்து வருகிறது. அதிலும் பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கைதாகி வருவது அதற்கு மேல் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

செங்கம் அருகே

இந்நிலையில் செங்கத்தை அடுத்த மேல்நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் பழனிசாமி, மரவேலை செய்யும் தொழிலாளி. இவரது தந்தை ஆறுமுகம் கடந்த 1996-ஆம் ஆண்டு இறந்துவிட்டாா். இறப்பு சான்றிதழ் பெற்ற ஆறுமுகம் வாரிசு சான்றிதழ் பெறவில்லையாம்.

இந்த நிலையில், ஆறுமுகம் பெயரில் உள்ள ஓா் ஏக்கா் நிலத்தை பழனிசாமி மகன்கள் இருவருக்கு பிரித்துக் கொடுக்க வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டதால், கடந்த மாா்ச் மாதம் இ-சேவை மையத்தில் பழனிசாமி பதிவு செய்துள்ளார். கிராம நிா்வாக அலுவலா் அதை ஏற்று, இறையூா் வருவாய் ஆய்வாளருக்கு பரிந்துரை செய்தாா்.

அதை இறையூா் வருவாய் ஆய்வாளா் ஏப்ரல் 12-ஆம் தேதி தள்ளுபடி செய்தாா். இதனைத் தொடர்ந்து மேலும் மூன்று முறை விண்ணப்பித்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதனால் மன வேதனை அடைந்த பழனிச்சாமி ஆர் ஐ பாரதியை சந்தித்து தனது மனு நிராகரிக்கப்பட்டது குறித்து கேட்டார் அதற்கு பாரதி, இ சேவை மையத்தில் விண்ணப்பித்தால் போதுமா, ரூபாய் ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால்தான் வாரிசு சான்றுக்கு பரிந்துரை செய்வேன் என கறாராக கூறிவிட்டாராம்.

இந்நிலையில் மீண்டும் வாரிசு சான்றுக்காக பழனிசாமி இ சேவை மையம் மூலம் விண்ணப்பித்துள்ளார் இதனைத் தொடர்ந்து ஆர்ஐ பாரதி மேல் நாச்சி பட்டு கிராமத்தில் பழனிச்சாமியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார் அப்போது ஆயிரம் ரூபாய் தராவிட்டால் மீண்டும் மனுவை நிராகரித்து விடுவேன் என சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம்.

இது குறித்து பழனிசாமி திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி வேல்முருகன், உதவி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் போலீசார் நேற்று மாலை ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுக்களை பழனிசாமியிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.

இதனை பழனிச்சாமி ஆர் ஐ பாரதி இடம் கொடுத்த போது மறைந்திருந்த போலீசார் பாரதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அதிரடி

சென்ற மாதம் திருவண்ணாமலை நகராட்சியில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஆய்வாளர், அதுபோலவே சமீபத்தில் ஆரணி வட்டாட்சியர் மஞ்சுளா, நேற்று முன்தினம் கலசப்பாக்கம் பகுதியில் லஞ்சம் கேட்ட விஏஓ, என தொடர்ச்சியாக அதிகாரிகள் சிக்கிக் கொண்டு வருவதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News