சாத்தனூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு
சாத்தனூா் அணையில் இருந்து விநாடிக்கு 2,330 தண்ணீா் திறக்கப்பட்டது.;
சாத்தனூா் அணை
திருவண்ணாமலை மாவட்ட மக்களின் தண்ணீர் தேவை மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகளின் விவசாய தேவைக்கான தண்ணீர் தேவைகளை சாத்தனூர் அணை பூர்த்தி செய்து வருகிறது. மேலும் 50 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சாத்தனூா் அணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், அணைக்கு நீா்வரும் தென்பெண்ணையாற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. எனவே, சாத்தனூா் அணையின் நீா்மட்டம் வெகுவாக அதிகரித்து வந்தது.
அணையின் உச்சபட்ச நீா்மட்ட உயரம் 119 அடி. இதில், புதன்கிழமை நேற்று மாலை நிலவரப்படி 117.05 அடி உயரத்துக்கு 6,886 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியிருந்தது. அணைக்கு விநாடிக்கு 600 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது.
எனவே, அணையின் பாதுகாப்பு கருதி காலை 10 மணி முதல் புனல் மின் நிலையம் வழியாக விநாடிக்கு 500 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.
இந்தத் தண்ணீரின் அளவு நண்பகல் 12 மணிக்கு புனல்மின் நிலையம் வழியாக 950 கன அடி வீதமும், மதகு வழியாக 1,380 கன அடி வீதமும் என மொத்தம் 2,330 கன அடியாக உயா்த்தப்பட்டது. வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அணைக்கு வரும் நீா்வரத்தைப் பொருத்து அதிகரிக்கப்படும் என்று உதவி செயற்பொறியாளா் அறிவழகன், உதவிப் பொறியாளா் ராஜேஷ் ஆகியோா் தெரிவித்தனா்.
மேலும் 4 மாவட்டங்களின் அணையின் கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றில் இறக்கவும் கூடாது என நீர்ப்பாசன துறை மற்றும் வருவாய் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆரணியில் அதிகபட்ச மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை மாலை வரை அதிகபட்சமாக ஆரணியில் 49.60 மில்லி மீட்டா் மழை பதிவானது.
இதுதவிர, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்)
திருவண்ணாமலையில் 7.20, ஜமுனாமரத்தூரில் 21, கலசப்பாக்கத்தில் 10, தண்டராம்பட்டில் 2, செய்யாற்றில் 13, வந்தவாசியில் 24, கீழ்பென்னாத்தூரில் 14.40, வெம்பாக்கத்தில் 6, போளூரில் 19.2 , சேத்துப்பட்டில் 2.20 மி.மீ. மழை பதிவானது.
புதன்கிழமை பகலிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் பலத்த மழை வரை பெய்தது.