சாத்தனூர் அணையில் இருந்து 1,710 கனஅடி தண்ணீர் திறப்பு
திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது;
தண்ணீர் நிரம்பிச் செல்லும் மஞ்சள் ஆறு
திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து இன்று காலை 1,710 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட மக்களின் தண்ணீர் தேவை மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகளின் விவசாயத்திற்கு சாத்தனூர் அணை பெரும் உதவியாக உள்ளது.
சாத்தனூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக வினாடிக்கு 1,190 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 117 அடியை எட்டியுள்ளது.
அணையில் இருந்து இன்று காலை 1,710 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றில் இறக்கவும் கூடாது என நீர்ப்பாசன துறை மற்றும் வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து மேலும் கூடுதல் நீர் அணையில் இருந்து திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணை பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக அளவு 12 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
போளூர் மஞ்சள் ஆற்றில் வெள்ளம்
தமிழகம் முழுவதும் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து கடந்த ஒரு வாரமாக போளூர் பகுதியில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
ஜவ்வாது மலையில் பெய்த மழையில் போளூர் பெரிய ஏரிக்கு நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய மஞ்சள் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஜவ்வாதுமலை பட்டறைகாடு என்ற இடத்தில் உற்பத்தியாகி அத்திமூர் வழியாக போளூர் பெரிய ஏரிக்கு வந்தடைகிறது.
பட்டறைகாட்டில் நேற்று இரவு சுமார் 1 மணி நேரம் பெய்த மழையினால் 86 மி.மீ பதிவாகி உள்ளது இதனால் போளூர் பெரிய ஏரிக்கு தொடர்ந்து மஞ்சள் ஆற்று வழியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.