திருவண்ணாமலை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.;
அடியோடு சாலையில் சாய்ந்த புளியமரம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த கோடை மழை பெய்தது. இதில் புளியமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென மேகம் சூழ்ந்து பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.
அப்போது ஏற்பட்ட சூறை காற்றில் செங்கம் குப்பநத்தம் சாலையில் இருந்த பழமையான புளியமரம் ஒன்று அடியோடு சாலையில் சாய்ந்தது.
இந்த புளியமரம் குறுக்கே விழுந்த தருணத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
புளிய மரம் சாலையில் சாய்ந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதிய மக்கள் செங்கம் நெடுஞ்சாலைத்துறை மின்சார துறைக்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மின்சாரம் நிறுத்தப்பட்டு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கோவிந்தசாமி, உதவி பொறியாளர் ப்ரீத்தி தலைமையிலான பணியாளர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மரம் அப்புறப்படுத்தப்பட்டது.
மேலும் அந்த சாலையில் பட்டுப்போன புளிய மரங்கள் அதிக அளவில் உள்ளது. நெடுஞ்சாலை துறையினர் அந்த மரங்களை ஆய்வு செய்து மழை காலங்களுக்கு முன்னதாக கண்டறிந்து அகற்றிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.
மின்னல் தாக்கி கறவை மாடுகள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை வட்டம் சொரக்குளத்தூரில் ஐயப்பன் என்பவருக்கு சொந்தமான கறவை மாடு ஒன்றும், மாதுளம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணிமாறனுக்கு சொந்தமான கறவை மாடு ஒன்றும் மின்னல் தாக்கி உயிரிழந்தன.
இது குறித்து தகவல் அறிந்த துரிஞ்சாபுரம் வருவாய் ஆய்வாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர்கள், ஆகியோர் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மின்னல் தாக்கி இறந்த இரண்டு கறவை மாடுகள் குறித்த தகவல்களை திருவண்ணாமலை தாசில்தார் தியாகராஜனுக்கு அறிக்கையாக சமர்ப்பித்தனர்.
இது குறித்து தாசில்தார் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாநில பேரிடர் மேலாண்மை நிதி திட்டத்தின் கீழ் கறவை மாடுகள் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு அரசின் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் அதிகபட்சமாக 12 மி மீ, திருவண்ணாமலையில் 4 மி மீ, ஆரணியில் 8.2 மி மீ , போளூரில் 4 மி மீ மழை பெய்தது.