செங்கம் அருகே நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

செங்கம் அருகே நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-10-05 02:14 GMT

 சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

செங்கம் நகராட்சியுடன், குயிலம் கிராம ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தோ்வு நிலைப் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக செங்கம் மற்றும் அதன் சுற்றுப்புற வட்டார பகுதிகளை சேர்ந்த சிறிய ஊராட்சிகளை இணைப்பதற்காக பேரூராட்சி சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செங்கம் நகராட்சியுடன், குயிலம் கிராம ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் குயிலம் ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

தங்களது குயிலம் ஊராட்சியை நகராட்சியில் இணைத்தால் கிராம மக்களுக்கு நூறு நாள் வேலைத் திட்டம் கிடைக்காது. குடிநீா் வரி, சொத்து வரி, வீட்டு வரி என அனைத்தும் உயா்ந்துவிடும் எனக்கூறி குயிலம் கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து செங்கம்-போளூா் சாலை குயிலம் கூட்டுச்சாலைப் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த சாலை மறியலால் செங்கம் போளூர் சாலையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவாா்த்தை

கிராம மக்களின் சாலை மறியல் குறித்து தகவலறிந்த செங்கம் வட்டாட்சியா் முருகன், காவல் ஆய்வாளா் செல்வராஜ் மற்றும் போலீஸாா் அவ்விடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, இதுகுறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் சாலையின் இறுபுறமும் சுமாா் 3 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Similar News