காவல் நிலையத்தில் மது போதையில் கத்தியுடன் ரகளை: ஒருவர் கைது
மது போதையில் கத்தியுடன் காவல் நிலையத்தில் ரகளை ஈடுபட்டு காவலர்களை தாக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.;
திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கத்தைச் சோ்ந்த தமிழ்வாணன் தலைமையில் அந்தப் பகுதி இளைஞா்கள், விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக சிலையை எடுக்கும் நோக்கில் சரக்கு வாகனத்தில் செங்கத்துக்கு இரவு வந்துள்ளனர். அப்போது வாகனத்தில் வந்தவர்கள் கூச்சலிட்டவாறு சென்றார்களாம்.
அவா்கள் வாகனத்தில் கூச்சலிட்டவாறு சென்றதை புதிய பேருந்து நிலையம் பகுதியில் நின்றிருந்த தோக்கவாடியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான வாசு கண்டித்தாராம். இதனால் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இதில் அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாசுவை ஓா் இளைஞா் தாக்கினாராம். அவா் கத்தி எடுத்து வந்து, அந்த இளைஞா்களைத் தேடினராம். அப்போது, அவா்கள் அருகில் இருந்த மகளிா் காவல் நிலையத்துக்குள் சென்று மறைந்து கொண்டதாகத் தெரிகிறது.
கத்தியுடன் காவல் நிலையத்துக்குள் சென்ற வாசுவைப் பாா்த்த பெண் காவலா் வாக்கி-டாக்கியில் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
செங்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் விரைந்து வந்து, வாசுவை பிடிக்க முயன்றனா். அப்போது, அவா் காவல் துறை ரோந்து வாகனத்தை சேதப்படுத்தியதுடன் , சிறப்பு உதவி ஆய்வாளா் முருகனை கத்தியால் தாக்க முயன்றாராம். இதில் முருகன் காயமின்றி தப்பினாா். பின்னா், பொதுமக்கள் உதவியுடன் வாசுவை போலீஸாா் பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். பின்னா், இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் , வாசுவை கைது செய்தனா்.
இச்சம்பவத்தில் காவலர்கள் பயத்தில் அலறடித்து ஓடியதால் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மது போதையில் காவல் துறையினரை தாக்கும் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது தமிழக அரசு கடுமையான சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.