திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மனு அளித்த மக்கள்
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மக்கள் காத்திருந்து மனு அளித்தனர்.;
பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் முருகேஷ்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையிலும், திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் டி.ஆர்.ஓ தலைமையிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி 2-வது நாளாக இன்று நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 1432 ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தியில் தானிப்பாடி உள் வட்டத்திற்கான 21 கிராம மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்
இந்நிகழ்ச்சியில் தண்டராம்பட்டு வட்டாட்சியர் அப்துல் ரகூப் மற்றும் துறை அலுவலர்கள், ஒன்றிய குழு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது. திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-வது நாளான இன்று திருவண்ணாமலை வடக்கு பிர்காவுக்கு உட்பட்ட திருவண்ணாமலை நகரம், ஆடையூர், சின்னகாங்கியனூர் நொச்சிமலை, சாவல் பூண்டி, அடி அண்ணாமலை, அய்யம்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர்.
காலை முதல் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் மனுக்களை பதிவு செய்தனர். ஜமாபந்திக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். தாசில்தார் சரளா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா, வட்ட வழங்கல் அலுவலர் முருகன், வருவாய் ஆய்வாளர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்டார். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பிர்காவுக்கு உட்பட்ட கிராமங்களுக்கான வருவாய்துறை ஆவணங்களை அவர் தணிக்கை மேற்கொண்டார்.