ஏடிஎம்-ல் பணம் எடுக்க உதவுவது போல நடித்து, பலரிடம் ஏமாற்றிய நபர் கைது

செங்கம் பகுதியில் ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்கு உதவுவது போல நடித்து, பலரிடம் ஏமாற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்

Update: 2021-09-06 12:56 GMT

மாதிரி படம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மேல்புழுதியூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் மனைவி கோகிலதீபா, என்பவர் தனது தந்தையின் கணக்கிலிருந்து  மூலம் பணம் எடுப்பதற்காக, கடந்த 01.09.2021 ஆம் தேதி செங்கத்தில் உள்ள ஏடிஎம்- ல் பணம் எடுக்க சென்றுள்ளார், அந்த ஏடிஎம்ல் பணம் இல்லாததால், அருகிலிருந்த India No1 ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்றுள்ளார். அதில் பணம் எடுக்கத் தெரியாததால், அங்கிருந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் பணம் எடுக்க உதவுவதாக கூறி ஏடிஎம்கார்டு மற்றும் ரகசிய எண்ணை வாங்கிக் கொண்டு ஏடிஎம்-ல் பணம் எடுக்க முயன்றார்.

பின்னர் அந்த நபர் பணம் இல்லை எனக் கூறி உடனடியாக வேறு ஏடிஎம்மிற்க்கு அனுப்பி விட்டார். ஆனால் ஏடிஎம் கார்டு மூலம் தலா 9,500/- இரண்டு முறையும் மற்றும் ஒரு முறை 1,000/- ரூபாய் என மொத்தம் மூன்று முறையாக 20,000/- ரூபாய் அவரது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்து விட்டதாக, செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தது.

இதை அடுத்து வங்கியில் சென்று விசாரித்த போது அந்த நபர் தந்தையின் ஏடிஎம் கார்டுக்கு பதிலாக வேறு போலி ஏடிஎம் கார்டை கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்தது. இது குறித்து செங்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது குறித்து செங்கம் காவல்நிலைய, வழக்குப்பதிவு விசாரணை செய்ததில், செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி அருகே உள்ள SBI ஏடிஎம் அருகே அந்த நபர் இருப்பது தெரியவந்தது.

அவரை பிடித்து விசாரணை செய்ததில் கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா, எரும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி மகன் நவீன்குமார், என்பதும், அவர் ஏற்கனவே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அவலூர்பேட்டையில் இதேபோன்று ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்கு உதவி செய்வதுபோல் ஏமாற்றியதற்காக 2019-ம் ஆண்டு 10 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று ஜாமினில் வெளியே வந்தவர் என்பதும் தெரிய வந்தது. 

அவர் திருவண்ணாமலை, செங்கம், போளூர் உள்ளிட்ட பகுதிகளில் இதேபோன்று தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததும், இவர் மீது திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 24 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்து அவரிடமிருந்து 4,00,100/- ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

Tags:    

Similar News