சாத்தனூர் அணையில் 15 நாட்களுக்குப்பின் அனுமதி; சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
திருவண்ணாமலை மாவட்ட முக்கிய சுற்றுலாத்தளமான சாத்தனூர் அணையை பொதுமக்கள் பார்வையிட பொதுப்பணித்துறை அனுமதியளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை பாதிப்பானது கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சத்தை அடைந்த நிலையில் தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமலானது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு கடந்த சில வாரங்களாகவே ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. இந்நிலையை ஜூலை 5ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான சாத்தனூர் அணை திறக்கப்பட்டது. திருவண்ணாமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாத்தனுர் அணையை சுற்றிப்பார்க்க ஜூலை 5ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது.
இதற்கிடையே கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததால் மாவட்டத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் சாத்தனூர் அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூடுவதற்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்தார். அன்று முதல் சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. திங்கட்கிழமை முதல் கடற்கரை, உயிரியல் பூங்கா, சுற்றுலாத்தலங்கள் பூங்காக்கள் திறக்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. வழக்கம்போல் இன்று முதல் சாத்தனூர் அணைக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சாத்தனூர் அணை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அரசு சுற்றுலா தளங்களை அனுமதிக்கலாம் என அறிவிக்கப்பட்டதால் சாத்தனூர் அணை சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு இன்று முதல் அனுமதிக்கப்படும். சாத்தனூர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்.
கிருமி நசினி மூலம் கை கழுவிய பின்பு பின்புதான் அணையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். முகக்கவசம் அணிய வில்லை என்றால் அனுமதி கிடையாது. 50 சதவீத சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். உள்ளே சென்ற பயணிகள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து நடந்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்களை வெளியேற்றப்படும் என்றும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சாத்தனூர் அணை திறந்திருக்கும் என கூறினார்.