சாலையின் குறுக்கே மரங்களை போட்டு பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை அருகே சேதமான சாலையை சீரமைக்க கோரி சாலையின் குறுக்கே மரங்களை போட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் வட்டம் வெறையூர் அருகே சாலையின் குறுக்கே மரங்களைப் போட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை அருகே தென்மாத்தூர் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை பகுதியில் இருந்தும் வெறையூர் பகுதியில் இருந்தும் செல்லும் போது வளைவு பகுதிகளில் உள்ள சாலை மிகவும் சேதமான நிலையில் இருப்பதால் அடிக்கடி இரவு விபத்து நிகழ்கிறது.
எனவே அதனை சீரமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சாலை மறியலில் ஈடுபட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வளைவு பகுதியில் இரண்டு விபத்துக்கள் ஏற்பட்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் சேதமான சாலையினால் தொடர்ந்து விபத்து ஏற்படுவது மட்டுமல்லாமல் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் இதுவரை சீரமைக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருக்கோயிலூர் சாலையில் தென்மாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையின் குறுக்கே மரங்களை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வெறையூர் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் உடனடியாக சீரமைத்து தர வேண்டும் மேலும் சாலை விரிவாக்கம் செய்யும் அதிகாரிகளிடம் பலமுறை நாங்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் இரவு மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் வாகன ஓட்டிகள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
சில நாட்களுக்கு முன்பு தென்மாத்தூர் பகுதி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விபத்தில் சிக்கினார். இதில் சிறுவன் உயிரிழந்தார் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். எனவே சேதமான சாலையை சீரமைப்பது மட்டுமல்லாமல் விபத்து ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.
பின்னர் போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து சாலை சீரமைக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் சாலையில் இருந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.