ஒரே இடத்திற்கு இரண்டு முறை பட்டா; பயனாளிகள் போராட்டம்
செங்கம் அருகே ஒரே இடத்துக்கு இரண்டு முறை பட்டா வழங்கிய அதிகாரிகளால், பயனாளிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தனி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
செங்கம் ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் ஒரே இடத்துக்கு இரண்டு முறை பட்டா வழங்கியதால் குளறுபடி ஏற்பட்டு, முறைகேடாக வழங்கிய பட்டாக்களை ரத்து செய்யக் கோரி, வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த பாதிக்கப்பட்டவா்களால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கம் அருகே ஒரே இடத்திற்கு இரண்டு முறை பட்டா வழங்கிய ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள். பாதிக்கப்பட்ட 35 பயனாளிகள்தனி வட்டாட்சிய ர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டகுளம் ஊராட்சியைச் சேர்ந்த 35 நபர்களுக்கு கடந்த 2004 ஆண்டு ஆதித் திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் இலவச வீட்டு மனை பட்டாவினை செங்கம் தனி வட்டாட்சியர் ரமணிஹரன் பட்டா வழங்கி உள்ளார். 2004 ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய பின்பு பயனாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டி வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் 2004 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அதே இடத்தை கடந்த 2018 ஆம் வருடம் பணியில் இருந்த தனி வட்டாட்சியர் தீர்த்தமலை மீண்டும் அதே இடத்தை முழுமையாக ஆய்வு செய்யாமல் 37 நபருக்கு பட்டா வழங்கி அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக குற்றம்சாட்டி குடியிருப்பு வாசிகள் பல முறை தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 35 குடும்பங்களை தோ்ந்த நபா்கள் முதலில் பட்டா வாங்கி அங்கு வசித்து வரும் எங்கள் பட்டாக்களை கணக்கில் ஏற்றாமல், இரண்டாவது முறையாக அதே இடத்துக்கு பட்டா வாங்கியவா்களின் பட்டாக்கள் ஆன்லைனில் ஏற்றியது எப்படி?
அதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் மீது உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி குடியிருப்பு வாசிகள் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், ஆதிதிராவிடா் நலத் துறை வட்டாட்சியா் தேன்மொழி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்ததால், மனு அளிக்க வந்தவா்கள் மாலை வரை காத்திருந்தனா்.
பின்னா், போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், மாலை 6 மணிக்கு அலுவலகம் வந்த வட்டாட்சியா் தேன்மொழி, அவா்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு, இரண்டு தினங்களில் நேரடியாக அப்பகுதிக்கு வந்து இடங்களை பாா்வையிட்டு பின்னா் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.