செங்கம் பகுதியில் புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்பு
செங்கம் பகுதியில் புதிய பள்ளி கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்;
புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் வேலு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அரசு விழாக்களில் அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கி, கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டன.
வானாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.
விழாவில் தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது;
கிராமப்புறம் முன்னேறினால் தான் தமிழ்நாடு முன்னேறும் மாநிலங்கள் முன்னேறும்.
கிராமங்கள் முன்னேற வேண்டும் என்றால் அதற்கு அடிப்படையானது கல்வி, கல்வியில் வளர்ச்சி பெற்ற நாடு செழிப்பாக இருக்கும் என்றும், கல்வி கற்றால் தான் மக்கள் பண்பாடு வளருவார்கள் என்றும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எப்படி சொல்லிக் கொடுக்கிறார்களோ அப்படி தான் மாணவர்கள் வளருவார்கள் என்றும், அதற்கு உதாரணம் என்னையே நான் சொல்கிறேன், குறிப்பாக சிறுவயதில் பள்ளி காலகட்டத்தில் பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டிகளில் பங்கேற்றதனால் தான் தமிழ்நாட்டில் அடையாளம் காட்டப்படும் அமைச்சராக தான் வளர்ந்து உள்ளேன் என்றால் அதற்கு பள்ளிக்கூடம் தான் காரணம் என்னுடைய ஆசிரியர்கள் தான் காரணம் என தனது பள்ளி நினைவுகளை நினைவு கூர்ந்து பேசினார்.
தொடர்ந்து பேசுகையில், ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதை நேரடியாக பள்ளிக்கூடத்தில் நாம் முறையாக படித்தோம் என்று சொன்னால் தமிழ்நாட்டில் காட்டப்படும் நபர்களாக சிறந்த மாணவர்களாக நீங்கள் உயர முடியும் என்பதற்கு அமைச்சராகிய நானே ஒரு சாட்சி என்று பொதுப்பணித்துறை அமைச்சர் உரையாற்றினார். மாணவர்கள் நன்றாக படித்தால்தான் வீட்டின் பொருளாதாரம் உயரும், அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும், படிப்பு தான் மாணவர்கள் சமுதாயத்தை மேம்படுத்த உதவும் எனவே மாணவர்களாகிய நீங்கள் ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை நன்றாக படித்து முன்னேற வேண்டும் என மாணவர்களிடையே நம்பிக்கை உரையாற்றினார்.
இவ்விழாவில் தொடர்ந்து வருவாய்த்துறை சாா்பில் பட்டா மாறுதல், வருமானச் சான்றிதழ், முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரண நிதி, பழங்குடியினா் சாதிச் சான்றிதழ் என 444 பயனாளிகளுக்கு ரூ.63 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதேபோல, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்), மது விலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை, வேளாண் துறை சாா்பில் மொத்தம் 3 ஆயிரத்து 76 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 11 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
கட்டடங்கள் திறப்பு
இதேபோல, பேராயம்பட்டு, வானாபுரம், காம்பட்டு, ராதாபுரம் ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடைகள், பள்ளிக் கட்டடங்கள் என மொத்தம் ரூ.2 கோடியே 17 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான கட்டடங்களை திறந்துவைத்தாா்.
விழாவில், எம்எல்ஏக்கள் கிரி, சரவணன், மாநில தடகளச் சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரிஷப், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நடராஜன், மகளிா் திட்ட இயக்குநா் சரண்யா தேவி, தண்டராம்பட்டு ஒன்றியக் குழுத் தலைவா் பரிமளா கலையரசன், துணைத் தலைவா் பூங்கொடி உள்பட பல்வேறு துறைகளின் அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.