குழந்தை பிறந்த 11 நாட்களுக்கு பிறகு தாய் மரணம்: உறவினர்கள் போராட்டம்

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 11 நாட்களுக்கு பின் தாய் மரணம் அடைந்ததால், உறவினர்கள் போராட்டம்.

Update: 2021-08-18 05:33 GMT

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நந்தினியின் உறவினர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்கொடியன். இவரது மனைவி நந்தினி (வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நந்தினி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த 6-ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் நந்தினிக்கு பெண் குழந்தை பிறந்தது. நந்தினிக்கு உயர்ரத்த அழுத்தம் மற்றும் சக்கரைநோய் உள்ளதால் உடல்நிலை சரியில்லை என்று கூறி டாக்டர்கள் மருத்துவமனையிலேயே தங்கவைத்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று நந்தினிக்கு மீண்டும் உடல் நிலை மோசமானதாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நள்ளிரவு திடீரென மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, ரமேஷ் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட உறவினர்கள், நந்தினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News