மனைவி, 4 குழந்தைகளை கொன்று கூலித்தொழிலாளி தற்கொலை
மனைவி, 4 குழந்தைகளை வெட்டிக் கொலை செய்துவிட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
மனைவி, 4 குழந்தைகளை கொடூரமாக வெட்டிக்கொன்ற தொழிலாளி தற்கொலை ( கோப்பு படம்).
திருவண்ணாமலை மாவட்டத்தில், செங்கம் அடுத்த ஓரந்தவாடி மோட்டூர் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி வள்ளி. இத்தம்பதிக்கு திரிஷா, சவுந்தர்யா, மோனிஷா, தனுஸ்ரீ, பூமிகா என்று நான்கு மகள்கள். சிவசக்தி என்ற மகனும் இருந்துள்ளார். மூத்த மகள் சவுந்தர்யா திருமணம் ஆகி, கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். திரிஷா 10-ம் வகுப்பும், மோனிஷா 9-ம் வகுப்பும், பூமிகா 4-ம் வகுப்பும், சிவசக்தி 1-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில் பழனி, மோட்டூர் பகுதியில் காஞ்சி கொரட்டாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மதுளமேரி என்பவரின் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து, கடந்த 4 ஆண்டுகளாக பயிர் சாகுபடி செய்து வந்தார். அத்துடன் பழனி தனது குடும்பத்துடன் அங்கு உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார்.
பழனிக்கு கடன் பிரச்சினைகள் இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில், அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது . இதுகுறித்து, கணவன்-மனைவி இருவரையும் குடும்பத்தினர் சமரசம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை வள்ளியின் தாய் ஜானகி தனது மகளை பார்ப்பதற்காக வீட்டுக்கு சென்றார் அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு இருந்தது. இதனால் அவர் குரல் கொடுத்துள்ளார்.
அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பழனி தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு கூச்சலிட்டாா். உடனே அக்கம்பக்கத்தினா் வந்து வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது ஒரே அறையில் வள்ளி, திரிஷா, மோனிஷா, தன்யாஸ்ரீ, சிவசக்தி ஆகிய 5 பேரும் கழுத்து, தலைப் பகுதிகளில் வெட்டு, அறுப்புக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தனா். 9 வயது சிறுமி பூமிகா மட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா்.
அங்கிருந்தவா்கள் சிறுமியை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பூமிகா மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
தகவலறிந்த திருவண்ணாமலை தாலுாகா போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து பழனி உள்பட 6 பேரின் சடலங்களை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் கைரேகை நிபுணர்களும் விரைந்து வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கஞ்சா போதையில் பழனி, தனது மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டிக்கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது