சாத்தனூா் அணையிலிருந்து மாா்ச் முதல் வாரத்தில் தண்ணீா் திறக்க முடிவு
சாத்தனூா் அணையில் இருந்து மாா்ச் முதல் வாரத்தில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சாத்தனூர் அணையில் இருந்து மார்ச் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பதற்கு அரசாணை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவவசாயிகளிடம் கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பது குறித்து திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நீர்வளத்துறையின் சார்பில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பது குறித்து விவசாயிகளிடம் கருத்துகள் அவர் கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
சாத்தனூர் அணை இந்த ஆண்டு முழுமையாக நிரம்பியிருக்கிறது. அணையில் தற்போது 7,264 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதில், அணை பராமரிப்பு, மீன் வளர்ப்பு போன்ற தேவைக்காக 308 மி.க.அடி தேவைப்படுகிறது. மேலும், திருவண்ணாமலை, தானிப்பாடி, சாத்தனூர், புதுப்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு 323 மி.க.அடி தேவைப்படும். அதோடு, மண் தூர்வினால் 300 மி.க.அடி தண்ணீர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், நீர் ஆவியாதல் காரணமாக 726 மி.க.அடி தண்ணீர் வீணாகும்.
எனவே, மீதமுள்ள 5,606 மி.க.அடி தண்ணீரை மட்டுமே நேரடி விவசாய பாசனத்துக்கு திறக்க முடியும். எனவே, இம்மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் இருந்து, சுழற்சி முறையில் 90 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கிறோம். அதன்பிறகு, நீர் இருப்பு கணக்கிடப்பட்டு, வாய்ப்பு இருந்தால், மேலும் கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், பாசனத்திற்காக தண்ணீர் திறப்பதன் மூலம் திருக்கோவிலூர் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டில் 5 ஆயிரம் ஏக்கரும், சாத்தனூர் இடதுபுறக் கால்வாய் மூலம் திருவண்ணாமலை மற்றும் தண்டராம்பட்டு வட்ட ஆயக்கட்டில் 17 ஆயிரத்து 641 ஏக்கரும், திருக்கோவிலூர் தாலுகா ஆயக்கட்டில் 6 ஆயிரத்து 353 ஏக்கரும், சாத்தனூர் வலதுபுறக்கால்வாயில் தண்டராம்பட்டு வட்டத்தில் ஆயக்கட்டு பரப்பில் 1,818 ஏக்கரும், சங்கராபுரம் வட்டத்தில் ஆயக்கட்டு பரப்பில் 19 ஆயிரத்து 182 ஏக்கர் பாசன வசதி பெறும்.
இனிவரும் காலங்களில் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை போதிய அளவு நீர் இருப்பின் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநர் அரகுமார், பொதுப்பணித்துறை (நீர்வளம்) செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர்கள் ரஜேஷ், மதுசூதனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.