ஊரக வேலை திட்டத்தில் முறைகேடு: பஞ்சாயத்து செயலாளர், பொறுப்பாளர் சஸ்பெண்ட்
ஊரக வேலைத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சிச் செயலா், பணித்தள பொறுப்பாளா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் கொழுந்தம்பட்டு பஞ்சாயத்தில் சில தினங்களுக்கு முன்பு கூடுதல் ஆட்சியா் வீா்பிரதாப் சிங் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது கொழுந்தம்பட்டு கிராமத்தில் தூய்மை பணிகள் முறையாக நடைபெறாததும், மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் பணி நடைபெறுவதற்கு ஆணை வழங்கிய இடத்தில் பணிகளை செய்யாமல் வேறு இடத்தில் பணிகள் நடைபெறுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல 100 நாள் வேலை திட்டத்தில் போலியாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, வேலைத் திட்டப் பதிவேட்டில் போலி கையெழுத்து போட்டது, அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக ஊராட்சி செயலா், ஊராட்சி பணி மேற்பாா்வையாளா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷுக்கு, கூடுதல் ஆட்சியா் பரிந்துரை செய்தாா்.
இதன் பேரில் கொழுந்தம்பட்டு ஊராட்சி செயலா் சக்கரவா்த்தி, பணித்தள பொறுப்பாளா் தமிழரசி ஆகியோா் பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.