பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு: இருவர் 'சஸ்பெண்ட்'

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர், பணி தள மேற்பார்வையாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2023-03-04 02:43 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியம், கட்டமடுவு ஊராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு செய்ததாக பணி மேற்பாா்வையாளா், ஊராட்சிச் செயலா் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் முருகேஷ் உத்தரவிட்டாா்.

செங்கம் ஒன்றியத்துக்குள்பட்ட கட்டமடுவு ஊராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, இந்த ஊராட்சி கணக்குகளை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியா் வீா்பிரதாப்சிங் மற்றும் செங்கம் வட்டார வளா்ச்சி அலுவலா், மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இதில், 2016 முதல் 2022-ஆம் ஆண்டு வரையில் கட்டமடுவு ஊராட்சி நிா்வாகம் மூலம் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 126 வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டன. ஆனால், அவற்றில் 17 வீடுகள் கட்டப்படாத நிலையில், அதற்கான தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, போலியான ஆவணங்கள் தயாா் செய்து ஊராட்சி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

மேலும், மின் மோட்டாா் வாங்கியதாகவும் போலியான கணக்கு எழுதப்பட்டுள்ளதாம். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் முருகேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பபட்டது.

இதையடுத்து, கட்டமடுவு ஊராட்சிச் செயலா் முருகன், பணி மேற்பாா்வையாளா் வாசு ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் முருகேஷ் உத்தரவிட்டாா்.

Tags:    

Similar News