அயர்லாந்து நாட்டு பெண் மர்ம மரணம்: உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

மர்மமான முறையில் இறந்த அயர்லாந்து பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு 2 மணி நேரம் பிரேத பரிசோதனை நடைபெற்றது;

Update: 2023-07-28 11:09 GMT

பிரேத பரிசோதனையின் போது போலீசார், மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.

சாத்தனூர் அருகே மர்மமான முறையில் இறந்த அயர்லாந்து பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு 2 மணி நேரம் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகில் உள்ள நெடுங்காவாடி கிராமத்தில் ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒருவர் 5 ஆண்டுக்கு முன்பு நிலம் வாங்கி அதில் பண்ணை வீடு அமைத்து வசித்து வந்தார். பின்னர் அவர் ரஷ்யா சென்று விட்டார்.

அப்போது அவர் திருவண்ணாமலையில் வசித்து வந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு வீட்டை வாடகைக்கு விட்டு சென்றார்.

அந்த பெண் பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதனால் தனது பாதுகாப்புக்காக 3 நாய்களையும் வளர்த்து வந்தார்.

இவருக்கு, திருவண்ணாமலையைச் சேர்ந்த ஹரி, என்பவர் உதவியாளராக இருந்தார்.

பார்ப்பதற்கு மங்களகரமாக இருக்கும் அந்த மூதாட்டியை அங்கிருப்பவர்கள் மீனாட்சியம்மாள் என செல்லமாக பெயர் சூட்டி அழைத்து வந்தனர்.

ஹரி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், காய்கறி, பழம் வாங்கி வந்து கொடுப்பது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கம் போல மீனாட்சி அம்மாளை பார்ப்பதற்கு ஹரி நெடுங்காவாடி பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது நாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தன. உள்ளே சென்று பார்த்தபோது மீனாட்சி அம்மாள் இறந்து அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

பின்னர், ஹரி மற்றும் கிராமத்தினர் மீனாட்சியம்மாள் உடலை சடங்குகள் செய்து அதே பண்ணை வீட்டில் புதைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் ஹரி இறந்த அயர்லாந்து பெண் மீனாட்சியம்மாளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் சாலம்மாவிடம் மனு கொடுத்துள்ளார்.

அப்போது சந்தேகம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் இறந்த பெண்மணி அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் என்பதால் அது குறித்து வருவாய்த்துறை, காவல்துறைக்கு புகார் தெரிவித்தார்.

அதன்படி நேற்று தாசில்தார் அப்துல்ரகூப், மண்டல துணை தாசில்தார் மோகனராமன், துணை காவல் கண்காணிப்பாளர் தேன்மொழி வெற்றிவேல், வருவாய் ஆய்வாளர் சத்திய நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர்.

அயர்லாந்து பெண் புதைக்கப்பட்ட இடத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து இறந்த அயர்லாந்து பெண்ணிடம் தொடர்பில் இருந்த ஹரி உள்ளிட்ட நபர்களிடமும் அவரை புதைத்த கிராம முக்கிய பிரமுகர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அயர்லாந்து நாட்டு பெண்ணை கிராம மக்கள் மீனாட்சி அம்மாள் என்று அழைத்தாலும் அவரது உண்மையான பெயர் யாருக்கும் தெரியவில்லை.

போலீசார் நடத்திய விசாரணையில் அவருடைய பெயர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அனார் லூசார்டி, என்பதும் இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்தப் பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது

மேலும் இறந்த அனார் லூசார்டி இறப்பு குறித்து அயர்லாந்தில் உள்ள அவரது சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாவில் சந்தேகம் இருப்பதால் இந்தியாவிற்கு வந்து பிரேத பரிசோதனை செய்ய புகார் கடிதம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் தற்போது இந்தியாவிற்கு வருவதற்கான சூழ்நிலை இல்லாததால் அங்கு இருந்த வண்ணமே பிரேத பரிசோதனை செய்ய அனுமதி அளித்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று பகல் 3.30 மணியளவில் துணை காவல் கண்காணிப்பாளர் தேன்மொழி வெற்றிவேல், தாசில்தார் அப்துல் ரகூப் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

இந்த பிரேத பரிசோதனையை வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. 3.30 மணிக்கு தொடங்கிய இந்த பரிசோதனை 5.30 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது இந்த பிரேத பரிசோதனையை காண்பதற்கு ஏராளமான மருத்துவக் கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் குவிந்திருந்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்து அதே இடத்தில் பிணம் புதைக்கப்பட்டது. மேலும் சில முக்கிய உடல் கூறுகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அயர்லாந்து பெண்ணை புதைப்பதற்கு உதவிய அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களிடமும் ஹரியிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News