நகைக் கடைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை..!
நகைக் கடைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை, செங்கத்தில் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பஜார் மற்றும் ராஜ வீதிகளில் உள்ள இரண்டு நகைக்கடைகளில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பஜார் வீதி மற்றும் ராஜவீதியில் 2 நகைக் கடைகள் உள்ளன.இந்தக் கடைகளில் வர்த்தகம் முடிந்து, இரவு கடையை மூடுவதற்கு உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் முற்பட்டபோது, அங்கு வந்த வருமான வரித்துறையினர், கடையில் நடைபெற்றவர்த்தகம் மற்றும் பணப்பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது .மேலும் கணக்கில் வராத பணம் மற்றும் தங்க நகைகள் குறித்து விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு நகைக் கடைகளில் வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் சோதனையால் செங்கம் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற சோதனை இரவு 10.30 மணிக்கு நிறைவடைந்தது. பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
4.5 லட்சம் பறிமுதல்
பறக்கும் படை அதிகாரிகள் போளூர் சாலையில் பக்கிரி பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நாச்சி பட்டு கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் தேவராயன் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூபாய் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் போளூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் அ ல்லியந்தல் கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன் மகன் கௌதம் எடுத்துச் சென்ற ரூபாய் 2 லட்சத்து 70 ஆயிரம், மற்றும் கீழ் வணக்கம்ப்பாடி பகுதி நல்லவன் பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூபாய் 58 ஆயிரம் என மொத்தம் 4 லட்சத்து 55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த பணத்தை பறக்கும் படியினர் செங்கம் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைத்தனர். பின்னர் பணம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. தேர்தல் துணை வட்டாட்சியர் திருநாவுக்கரசு துணை வட்டாட்சியர் ராஜேந்திரன் செங்கம் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.