சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்

போளூர் மற்றும் செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் வாழைகள் சாய்ந்தன.

Update: 2024-05-08 02:18 GMT

மழையால்  சாய்ந்த  வாழைகள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் போளூர் வட்டத்தில் சந்தவாசல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் திங்கள்கிழமை இரவு 11 மணியளவில்லேசான காற்றுடன் மழை பெய்தது பின்னர் சூறைக்காற்றுடன் அதிக மழை பெய்யத் தொடங்கியது.

இதில் செங்கத்தில் பல வீடுகளில் முன்பகுதியில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. சில மரங்கள் வேருடன் சாய்ந்தன.

இதனால், திங்கள்கிழமை இரவு 12 மணிமுதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிவரை மின் தடை ஏற்பட்டது.

மேலும் கிளையூா், கல்லாத்தூா், பண்ரேவ், கொட்டாவூா், குப்பனத்தம் பகுதில் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழைகள் குலையுடன் சாய்ந்தன.

இதுகுறித்து செங்கம் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

100 ஏக்கர் வாழைமரம் சேதம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே சந்தவாசல், படவேடு, புஷ்பகிரி, சின்ன புஷ்பகிரி ஆகிய பகுதிகளில் வாழை விவசாயம் முக்கிய தொழிலாக சுமார் 2000 ஏக்கரில் அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இங்கு பயிர் செய்யப்படும் வாழை மரங்களில் இருக்கும் வாழைப்பூ, வாழைத்தண்டு மற்றும் பழங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு பலத்த காற்று வீசியதில் சுமார் 100 ஏக்கர் வாழை மரங்கள் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

இந்நிலையில் சேதமடைந்த பகுதிகளை திமுக மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே. கம்பன் மற்றும் அரசு அலுவலர்கள் நேற்று பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று சேதமடைந்த வாழை மரங்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரை செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கம்பன் ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகரன், ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர்கள் காசி கிருஷ்ணமூர்த்தி ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோபு திமுக நிர்வாகிகள் ,அரசு அதிகாரிகள் ,வேளாண்மை துறை அதிகாரிகள் ,வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாயிகள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News