வேட்டை நாய்களை வைத்து உடும்பு வேட்டை: இருவர் கைது
வேட்டை நாய்களை வைத்து உடும்புகளை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் பகுதியில் வேட்டை நாய்களை வைத்து உடும்புகளை வேட்டையாடிய இருவரை வனத்துறை கைது செய்தனர். மேலும் ஏழு உடும்புகள் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் காப்புக்காடு, வேப்பூர், செக்கடி ஆகிய பகுதிகளில் வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மரத்தின் அருகே இரு சக்கர வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் காட்டுக்குள் யாராவது சென்று உள்ளார்களா என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வன அலுவலர்கள் வருவதைப் பார்த்து அப்பகுதியில் இரண்டு பேர் பதுங்கி இருந்தனர். இதனை கண்டுபிடித்த வனத்துறையினர் அந்த இரண்டு பேரையும் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் இளையாங்கன்னி ஊராட்சியை சேர்ந்த மைக்கேல் அலெக்சாண்டர், வின்சென்ட் ராஜ் என்பதும் அந்த காப்பு காட்டில் உள்ள உடும்புகளை வேட்டையாடியதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து வேட்டையாடிய ஏழு உடும்புகள் மற்றும் இரு சக்கர வாகனத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் உடும்புகளை வேட்டையாடுவதற்காக நாயை பயன்படுத்தியது தெரிய வந்தது. அந்த நாய்களின் உரிமையாளர்கள் தங்கமணி மற்றொரு தங்கமணியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து வேலூர் வன பாதுகாப்பு அலுவலர் பத்மா, மாவட்ட வன அலுவலர் யோகேஷ் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவர்களின் உத்தரவின் படி இருவரையும் சாத்தனூர்வமான அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து தண்டராம்பட்டு குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, செங்கம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.